புதன், 7 மார்ச், 2012

ரஷியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம்!


ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம்.
இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர்.
பிபிசி தொலைக்காட்சியில் ‘Tracking The Aryans’ என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார்.
இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர்.
அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்-அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் (Swastika symbol) ஆகியவை அடங்கும்.
ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார்.
இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை ‘விசிட்டிங்’ பேராசிரியையாகவும்உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(tt)